search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் மோதல்"

    • 6 மாணவர்கள், 10 வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
    • சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சூலூர் பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அங்கேயே சாப்பாடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு மாணவர்கள் விடுதியில் உள்ள கேண்டீனுக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். நேற்று அசைவு உணவு விடுதியில் வழங்கப்பட்டது.பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், மாணவர்களுக்கு சாப்பாடு வைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது மாணவர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசைவ உணவு வைக்கும்படி கேட்டதாக தெரிகிறது.

    அதற்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வைக்க முடியாது என மறுத்து விட்டனர். இதனால் மாணவர்கள் நேராக விடுதிக்கு சென்று மற்ற மாணவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து வந்து வடமாநில தொழிலாளர்களிடம் இதுகுறித்து கேட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு சற்று நேரத்தில் மோதலாக மாறி, மாணவர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கினர்.

    உடனே வடமாநில தொழிலாளர்கள் இதுகுறித்து மற்ற வடமாநில தொழிலாளர்களுக்கும் தெரியப்படுத்தினர்.அப்போது அங்கு திரண்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் மாணவர்களை தாக்கினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளையும் எடுத்து வீசி உடைத்தனர்.

    மேலும் அங்கிருந்த மரங்களை உடைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் கல்லூரி வளாகம் போர்க்களமாக மாறியது.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    இதில் 6 மாணவர்கள், 10 வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவர்களும், வடமாநில தொழிலாளர்களும் மோதி கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×